ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பூக்குழி திருவிழா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு கோயில் திருப்பணிகள் தொடங்கியது. முழுவதும் உபயதாரர்கள் நிதியில் புதிய கொடிமரம், தேர் சீரமைப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றது. ஜூன் 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை 6.40 மணி அளவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் பெரிய மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 28 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.