ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் வெள்ளிக்கிழமை காலை செப்புத்தேரோட்டம் நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி உற்சவம் ஜூன் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் திருவிழாவில் பெரியாழ்வார் ஆண்டாள், வெண்ணெய் தாழி கிருஷ்ணர் உள்ளிட்ட அழங்கரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வெள்ளிக்கிழமை காலை முக்கிய விழாவான செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் செப்புத் தேரில் எழுந்தருளிய பின், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து ரத வீதிகள் வழியாக தேர் இழுத்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் செய்தனர்.