வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்காக கண்காணிப்பு, சுகாதாரம், பொழுதுபோக்கு, போக்குவரத்து உள்ளிட்ட பக்தர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நாளை (மே 6) தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 16-ம் தேதி திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.
8 நாள் நடைபெறும் விழாவில் 24 மணி நேரமும் நடை திறக்கப்பட்டு இருக்கும். பக்தர்களும் நேர்த்திக்கடனை இரவும், பகலும் செலுத்துவர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் பொழுதுபோக்குக்காக கோயில் அருகே ராட்டினம், சர்க்கஸ், மாயாஜாலம், சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயில் திருவிழா தொடங்க உள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேனி, சின்னமனூர் வழித்தடத்தில் பேருந்துகள்செல்லும் வகையில் இரண்டு தற்காலிக பேருந்துநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிக்காக 270 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பாக கோயிலுக்குச் செல்லும் வகையில் சின்னமனூர் செல்லும் வாகனங்கள் போடேந்திரபுரம் விலக்கில் இருந்து மார்க்கையன்கோட்டை வழியாக மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடுகள் செல்லப்பட்டுள்ளன.
அதேபோல் சின்னமனூரில் இருந்து வரும் வாகனங்கள் தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதூர் வழியாக தேனி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. பொழுது போக்கு நிகழ்ச்சிகளான சாகசகிணறு, கொலம்பஸ், டோரா டோரா,கப் அண்ட் சாஸர், உள்ளிட்ட 35 வகையான ராட்டினங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
6-க்கும் மேற்பட்டஇடங்களில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருவிழா தொடங்க உள்ளதால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், திருக்கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டுவருகின்றனர். வரும் 9-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளதால் தேரையும் அலங்கரிக்கும் பணி தொடங்கி உள்ளது.