மூலவர்: பூமிநாதர் அம்பாள்: ஆரணவல்லி தல வரலாறு: முதல் யுகமான கிருதயுகத்தில், பூமிபாரத்தை தாங்க முடியாமல் பூமாதேவி, எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும்சக்தியை தனக்கு அதிகரித்துதர வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி கடும் தவமிருந்தாள், அவள் முன் தோன்றிய சிவபெருமான், “திரேதாயுகம், துவாபரயுகத்தில் பூமியை தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது. உன்னை பூஜிக்கும் நல்ல பக்தனால் இந்த வலிமை உனக்கு கிட்டும். இதற்கு நாராயணனின் கிருபையும் தேவை” என சொல்லி மறைந்தார். நல்ல பக்தர்களைத் தேடும் சமயத்தில் செல்லும் இடங்களில் உள்ள சுயம்பு மூர்த்திகளை பிரார்த்தித்தாள். பூமாதேவி பிரார்த்தித்த மூர்த்திகள் பூமிநாதர், பூலோகநாதர் என்று அழைக்கப்பட்டனர். அதில் ஒன்றே செவலூர் பூமிநாதர் கோயிலாகும்.
கோயில் சிறப்பு: கர்ப்பகிரகத்தில் பூமிநாதர் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள பிருத்வி தீர்த்தத்தின் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம் இது. திருமாலால் எழுப்பப்பட்ட புண்ணியத் தலம் இதுவாகும். மூலவர் மீது தினமும் சூரியஒளி படுவதுபோல் கருவறை அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
பிரார்த்தனை: பூகம்பம், நிலத்தகராறுகளால் தடைபட்டுள்ளகாரியங்கள், தொழிலில் தடை, கட்டிட வேலைகளில் பாதிப்பு,விவசாய வளர்ச்சியின்மை, கட்டிடம் கட்டும்போது புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம், நாகப்புற்றுகளை அழித்த பாபம் ஆகியன இங்கு வழிபட்டால் நீங்கும். பதினாறு செல்வங்கள் பெற, சொந்தமாக வீடு அமைய, உடல் உபாதைநீங்க சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜையில் வைத்த செங்கற்களை பக்தர்கள் வாங்கிச் செல்வது வழக்கம். அமைவிடம்: புதுக்கோட்டை – பொன்னமராவதி செல்லும் பாதையில் உள்ள குளிபிறை என்ற ஊரில் இருந்து 3 கிமீ சென்றால் செவலூரை அடையலாம். கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6-12, மாலை 3-8 வரை.