திருவள்ளூர்: திருத்தணி திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று கமலத் தேர்த் திருவிழா, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே திருவாலங்காடுவில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வரர் கோயில். திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயில், சிவபெருமான் திருநடனமாடிய ஐந்து திருச்சபைகளில், முதற்சபையான ரத்தின சபையை கொண்டது.
இந்த வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11 -ம் தேதி வரை நடைபெற உள்ள இத்திருவிழாவில், நாள் தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மனுடன் அன்ன வாகனம், பூத வாகனம், நாக வாகனம், புலி மற்றும் யானை உள்ளிட்ட வாகனங்களில் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில், பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய திருவிழாவான கமலத் தேர்த் திருவிழா இன்று காலை தொடங்கியது. இதில், வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அதிகாலையில் தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியுடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து, காலை 9.30 மணியளவில், திருத்தேர் தேரடியிலிருந்து புறப்பட்டது. மாலை நிறைவடைய உள்ள இத்தேர் திருவிழாவில், தேரை, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.