மதுரை: ராமேஸ்வரம் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா அடுத்தாண்டு முதல் 10 நாள் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பழமையானது. கோயில் நிர்வாகம், அறங்காவலர்களால் கோயிலின் வழிபாட்டு நிகழ்வுகளில் எத்தகைய மாற்றங்களையும் கொண்டு வர முடியாது. ரமேஸ்வரம் கோயிலில் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வைகாசி மாதத்தில் ஜூன் 3 முதல் 13 வரை திருவிழா நடைபெறும் என கோயில் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் பிரம்மோற்சவ விழா 3 நாள் மட்டும் நடைபெறும் என அறிவித்துள்ளது. எனவே ராமேஸ்வரம் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை 10 நாள் கொண்டாட உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு இன்று (ஜூன் 3) விசாரித்தது. கோயில் நிர்வாகம் சார்பில், அடுத்தாண்டு முதல் பிரம்மோத்சவ விழா 10 நாள் கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் பிரம்மோற்சவ விழா தொடங்கும் நாளில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த நேரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை முறையாக அமல்படுத்த முடியாது.
எனவே, அடுத்த ஆண்டு முதல் பிரம்மோற்சவம் விழாவை முறையாக, ஆகமவிதிப்படி 10 நாட்கள் கொண்டாடுவது தொடர்பாக கோயில் நிர்வாகம் தரப்பில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.