மதுரை: ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரம்ஜானையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் 300 அடிக்கு மேல் இருக்கும் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா செல்லும் பாதையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி, இன்று (மார்ச் 31) ரம்ஜானையொட்டி, சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலை மேலுள்ள நெல்லித்தோப்பு பகுதி திடலுக்கு நேற்று சென்றனர்.
அங்கு அவர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்தத் தொழுகையின்போது, மத நல்லிணக்கம், இயற்கை வளம் செழிக்கவேண்டும், மழை பெய்யவேண்டியும் சிறப்பு துவா செய்தனர். இதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்கள், பழனி ஆண்டவர் கோயில் வழியாக சென்றனர். அவர்களது பெயர், அடையாள அட்டை போன்ற விவரங்களை போலீஸார் ஆய்வு செய்து மலைக்கு அனுப்பினர். மலைக்கு செல்லும் பாதை, நெல்லித்தோப்பு, மலை அடிவாரப் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.