காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி இன்று (மார்ச 28-ம் தேதி) தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சின்னக் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது கோமளவல்லி தாயார் சமேத சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில். இந்தக் கோயில் யதோக்தகாரி பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி அதிகாலையில் கடந்த 23-ம் தேதி கோயில் கொடிக்கம்பத்தில் பட்டாச்சாரியார்களால் திருவிழாக்கொடி ஏற்றப்பட்டது.

கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை ஏற்றிய பிறகு கொடி மரத்துக்கும், உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. மாலையில் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார்.

விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் பெருமாள் தினசரி வெவ்வேறு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த விழாவின் முக்கிய விழாவான கருட சேவை மார்ச் 24-ம் தேதி காலை நடைபெற்றது. இதில் கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தார். நூற்றுக் கணக்கான பக்தர்கள் கூடி நின்று வழிபட்டனர். மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ராஜ அலங்கராத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று பெருமாளை வழிபட்டனர். மார்ச் 30-ம் தேதி தீர்த்தவாரி உற்சம் நடைபெற உள்ளது.