மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு இன்று 10,000 பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், அலகுகள் குத்தியும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பஜார் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நாகம்மாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் ஆடி உற்சவ விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி தற்போது 61-ம் ஆண்டு ஆடி உற்சவ விழாவையொட்டி, 15 நாட்களுக்கு முன் பக்தர்கள் கோயிலில் காப்புக்கட்டும் நிகழ்வுடன் தொடங்கியது. ஆடி உற்சவ விழாவின் முதல் நாளான இன்று காலையில் சக்தி கரகம் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலூர் சுற்றுவட்டார பகுதி பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். மேலும், பலர் உடலில் அலகுகள் குத்தியும், பறவைக் காவடிகள் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தெப்பக்குளத்தில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம் நகைக்கடை பஜார், பெரியகடை வீதி, செக்கடி பஜார் வழியாக கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டுவந்த பால் மூலம் நாகம்மாள் தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
காலை 9 மணியளவில் தொடங்கிய பால்குடம் ஊர்வலம் பிற்பகல் 3 மணி நிறைவு பெற்றது. இரண்டாம் நாளான நாளை (ஆக.13) முளைப்பாரி, பூத்தட்டு ஊர்வலம் நடைபெறவுள்ளது. மூன்றாம் நாள் (ஆக.14) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுவுள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு, மேலூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.