சேலத்தில் இருந்து 32 கி.மீ தொலைவிலும், மேட்டூர் அணை யில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருக் கோயில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலின் பிரதான வாசல் வடக்கு நோக்கி ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோயிலைச் சுற்றி உயர்ந்த மதில்கள், நான்கு திசைகளிலும் கோபுரங்களுடன் கூடிய வாசல்கள் உள்ளன.
ருத்ரரூபமாக சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து இங்கு அம்மன் அருள்பாலிக்கிறார்.
வலதுகாலை மேலூன்றி, பொன் சலங்கை அணிந்த இடது காலை அசுரன் மீது ஊன்றி வீராசனத்தில் அமர்ந்து, மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப்புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து மேச்சேரியில் பத்ரகாளியாய் பக்தர்களுக்கு அவள் அருள்பாலிப்பது தனி அழகு.
பத்ரகாளியம்மனை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் நீங்கும். ராகு – கேது தோஷ திருமண தடைகள் மற்றும் குழந்தை பேறின்மைக்கு ராகு காலத்தில் இங்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாள்தோறும் காலை, மாலை வேளையில் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் மாசி மாதம் இங்கு நடைபெறும் திருவிழா மிகச்சிறப்பு. அந்நாளில் பூங்கரகம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னிக் குண்டம் இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் என அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதுண்டு.