சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிதுனம் மாத வழிபாட்டுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது.
ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, மிதுனம் மாத வழிபாட்டுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ராஜீவரரு ஆகியோர் தலைமை வகித்தனர். மங்கல இசை முழங்க, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர், கோயில் நடையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, 18-ம் படி வழியே இறங்கிச் சென்று ஆழிக்குண்டத்தில் கற்பூர தீபம் ஏற்றினர். இதையடுத்து, பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவில் நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை முதல் வழிபாடுகள் நடைபெற உள்ளன. மாத வழிபாடுகளுக்குப் பின்பு வரும் 19-ம் தேதி இரவு நடை சாத்தப்பட உள்ளது. தற்போது சபரிமலையில் கனமழை பெய்து கொண்டிருப்பதால், பக்தர்கள் பலரும் நனைந்தபடியே சந்நிதானம் சென்றனர். பம்பை நதியிலும் வெள்ளம் கரைபுரண்டு சென்று கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று காவல் துறை சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.