கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் ஆசியாவிலேயே மிக உயரமாக 184 அடியில் முருகன் சிலை அமைக்கும் பணிக்கான நடவடிக்கைகள் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தமிழக முதல்வர் தலைமையிலான சீர்மிகு ஆட்சியில் திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அன்னதானக் கூடங்கள், தர்ப்பண மண்டபங்கள், பசுமட காப்பகங்கள் என அனைத்து பணிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டம், பேரூர், பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் குடமுழுக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இத்திருக்கோயிலில் தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் 50 நபர்கள் அமர்ந்து தர்ப்பணம் செய்கின்ற வகையில் ரூ.11.85 கோடி செலவில் மிகப் பெரிய அளவில் தர்ப்பண மண்டபம், சுகாதார வளாகம், காத்திருப்புக் கூடம், தகவல் மையம், படித்துறை சீரமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திருக்கோயிலில் ரூ.55 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், ரூ.51 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பசுமடம், ரூ.11 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கான கழிப்பிட வசதி போன்றவை பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 9 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றன. அதில் ஒன்றாக தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் 20,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் 2,948 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் ஆசியாவிலேயே மிக உயரமாக 184 அடியில் முருகன் சிலை அமைக்க தமிழ்நாடு முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அந்த சிலை அமைக்கும் பணிக்கான இடத்தினையும், இந்தாண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி வடவள்ளி பகுதியில் புதிய பல்தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக் கல்லூரி) அமையவுள்ள இடத்தினையும் ஆய்வு செய்தோம். வெகுவிரைவில் முருகன் சிலை அமைக்கும் பணிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்தார்.