நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சிறப்பு பிரார்த்தனை, நவநாள் திருப்பலி, மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, பேராலய கலையரங்கில் மாலை புதுச்சேரி – கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் புனிதம் செய்து வைத்தார். தொடர்ந்து, பெரிய தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருளினார்.
பெரிய தேரின் முன்பு 6 சிறிய தேர்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோனியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருளினர். இதையடுத்து, லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் பெரிய தேர் உள்ளிட்ட தேர்கள் புறப்பட்டு கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தன. அப்போது, ‘மரியே வாழ்க’, ‘ஆவே மரியா’ என பக்தர்கள் முழக்கமிட்டனர்.
விழாவில், பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத் தந்தைகள் ஆரோ ஜேசுராஜ், லூர்து சேவியர், ஆரோக்கிய பரிசுத்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விண்மீன் ஆலயத்தில் இன்று காலை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் அன்னையின் பிறப்பு விழா நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கப்பட்டு, பெருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி நாகை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாங்கண்ணியில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.