சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 63 நாயன்மார்கள் வீதிஉலா வந்து அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனம், சூரிய வட்டம், சந்திர வட்டம், அதிகார நந்தி உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா வந்து அருள்பாலித்தார். தேரோட்டம் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், 8-ம் நாளான நேற்று பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 63 நாயன்மார்கள் வீதிஉலா மாலை 3.30 மணி அளவில் தொடங்கியது. முன்னதாக, திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இசைத்த பக்தர்கள்.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், 63 நாயன்மார்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய’ என பக்தியுடன் முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து விநாயகர் முன்னே சப்பரத்தில் செல்ல, வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி – தெய்வானை சமேத முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக்கண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, வீரபத்திரர் வீதிஉலா வந்தனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் 63 நாயன்மார்களும் வீதியுலா வந்தனர். தொடர்ந்து, காவல் தெய்வமான கோலவிழியம்மன் வீதிஉலா வந்தார்.

மாடவீதிகளில் அறுபத்து மூவர் வீதிஉலா வரும் காட்சியை காண பிற்பகலில் இருந்தே சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். மயிலாப்பூர் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆங்காங்கே பந்தல் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்கினர்.

அடித்தபடி வந்த சிறுவன்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். கோயிலைச் சுற்றி மாட வீதிகளில் சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நாளை (ஏப்.12) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.