திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று வெண்ணெய்த்தாழி திருவிழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில், பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனி பெருவிழாவின் முக்கியத் திருவிழாவான வெண்ணெய்த்தாழி திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
நிகழண்டுக்கான வெண்ணெய்த்தாழி திருவிழா இன்று காலை நடைபெற்றது. அதையொட்டி காலை 7:30 மணி அளவில் ராஜகோபால சுவாமி வெண்ணெய் திருடும் கண்ணன் அலங்காரத்தில், வெள்ளி வெண்ணெய் குடத்தில் வெண்ணெய்யை அள்ளித் தின்னும் திருக்கோளத்தில் எழுந்தருவினார். அப்போது பக்தர்கள் சுவாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் வளம் வந்து மேலராஜ வீதி, பந்தலடி வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபத்தை சுவாமி வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மதியம் செட்டியார் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இரவு தங்க வெட்டும் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது.
முன்னதாக, வெண்ணெய்த்தாழி மண்டபத்தில் இருந்து மூன்று முறை செட்டித் தெருவில் தங்க வெட்டும் குதிரை வாகனமாக வளம் வந்த ராஜகோபால சுவாமி, அதனைத் தொடர்ந்து திருப்பாற்கடல் மண்டபத்தை வந்தடைந்தது. அங்கிருந்து கள்ளர் மகா சங்கம் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி ஏற்று நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
பங்குனி பெருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. அதை ஒட்டி காலை 7 மணி அளவில், ராஜகோபால சுவாமி பாமா ருக்மணி சமேதராக தேரில் எழுந்தருள உள்ளார். தொடர்ந்து, மதியம் 2 மணி அளவில் பக்தர்களும் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் தேரினை வடம் பிடித்து இழுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.