திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் முதல்முறையாக கருட வாகனத்தில் 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமித்து அருள்பாலித்த ஆன்மிக நிகழ்ச்சி இன்று (ஜூன் 11) நடத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று ராஜகோபாலசாமி, கோபிநாத சுவாமி ஆகிய பெருமாள்கள், கைலாசநாதர் கோயில் சன்னதி அருகே சூரிய உதயத்தின் போது சங்கமித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாற்றும் வகையில் இந்த ஆண்டு முதல், அருகில் உள்ள பெருமாள் கோயில்களில் இருந்தும் கருட வாகனத்தில் பெருமாள் வரவழைக்கப்பட்டு, அருள் பாலிக்கச் செய்ய மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் மற்றும் அறங்காவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி இன்று காலை 6.30 மணி அளவில் சூரிய உதயத்தின்போது, மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கோபிநாத சுவாமி, சேரன்குளம் வெங்கடாஜலபதி சுவாமி, நவநீதகிருஷ்ணன் சுவாமி, சாத்தனூர் பிரசன்ன வேங்கடரமண சுவாமி, ஏத்தக்குடி ராஜகோபால சுவாமி, திருமக்கோட்டை ரங்கநாத பெருமாள், இருள்நீக்கி லட்சுமி நாராயண பெருமாள் காலாச்சேரி ஸ்ரீனிவாச பெருமாள், பூவனூர் கோதண்ட ராமர், கீழப்பனையூர் கஸ்தூரி ரங்க பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, மன்னார்குடி கைலாசநாதர் கோயில் அருகே அணிவகுத்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பெருமாள்களுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் திருவாதிரை தினத்தன்று ராஜகோபால சுவாமி கோயில் முன்னிலையில், மன்னார்குடியில் உள்ள சிவாலயங்களில் இருந்து நடராஜர் சுவாமிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன் பின் தொடர்ச்சியாக இந்த ஆண்டிலிருந்து கைலாசநாதர் கோயில் முன்பு பெருமாள்கள் சங்கமித்து கருட வாகனத்தில் அருள்பாளிக்கும் இத்தகைய உதயகருட சேவை நிகழ்ச்சி நிகழாண்டிலிருந்து தொடங்கியிருப்பது சைவ,வைணவத்தின் ஒற்றுமை மற்றும் பெருமையை வருங்கால சந்ததியினருக்கும் எடுத்துச்செல்லுமென ஆன்மிகப் பெரியோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..