மூலவர்: அகத்தீஸ்வரர் அம்பாள்: பாடகவள்ளி தல வரலாறு: அகத்தியர் எவ்விடத்தில் சிவன் – பார்வதி திருமணக்காட்சி காண விரும்புகிறாரோ அவ்விடங்களில், தான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பேன் என்ற சிவபெருமான், அகத்திய முனிவருக்கு வரம் அளித்தார். அதன்பிறகு தென்திசை வந்த அகத்தியர் சிவ – பார்வதி திருமண தரிசனம் பெற வேண்டும் என எண்ணினார். சிவனைதரிசிக்கும் முன்பு நீராட விரும்பினார். அந்த நேரத்திலேயே, அதிசயமாக பாறையில் ஊற்று பெருகியது. வழிபட லிங்கம் எதுவும் கிடைக்கவில்லை, பாறையில் சுனை நீரை தெளித்து பாறையை நெகிழ்வாக மாற்றி சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார் அகத்தியர். (இத்தீர்த்தம் பெயராலேயே இவ்வூர் திருச்சுனை என்று அழைக்கப்படுகிறது) அப்போது
சிவன் பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். அகத்தியருக்கு காட்சி தந்ததால் இத்தல ஈசன், அகத்தீஸ்வரர் என பெயர் பெற்றார். இங்கு குன்றின் மீது சிவன் அருள் பாலிப்பது தனிச்சிறப்பு.
சிறப்பு அம்சம்: அகத்தியர் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் இருக்கிறார். சூரியன் தனியாகவும் இல்லாமல், நவக்கிரக மண்டபத்திலும் இல்லாமல், இத்தலத்தில் நுழைவு வாயில் அருகே உஷையுடன் காட்சி அருள்கிறார். அருகில் பிரத்யூஷா இல்லை.இந்த அமைப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காத அபூர்வ அமைப்பாகும். இத்தலத்தில் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இக்கோயில் அருகே உள்ளபிரான்மலையிலும் சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக்காட்சி அருளினார். அங்கும் ஒரு சிவன் கோயில் உள்ளது.
பிரார்த்தனை: திருச்சுனை தலத்தில் வழிபாடு செய்தால் மனக்குழப்பங்கள் நீங்கி அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். அமைவிடம்: மதுரை – திருச்சி சாலையில் 45 கிமீ தூரத்தில் மேலூரை அடுத்துள்ள கருங்காலக்குடிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் 2 கிமீ சென்றால் திருச்சுனை கோயிலை அடையலாம். கருங்காலக்குடி வரை பேருந்து வசதி உள்ளது. திறக்கும் நேரம்: காலை 8.30-11.00, மாலை 4.30-7.00 மணி வரை.