மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம், தேர்த்திருவிழாவின் போது எந்தெந்த இடங்களில் குடிநீர், மருத்துவ முகாம், கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை பக்தர்கள் அறிந்துகொள்ள மாநகராட்சி சார்பில் ‘க்யூஆர் கோடு’ வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து ஆணையர் சித்ரா கூறியது: “மதுரை சித்திரை திருவிழாவில் நாளை (மே 8) திருக்கல்யாணம், வெள்ளிக்கிழமை (மே 9) தேரோட்டம் நடக்கிறது. இந்த விழாக்களில் பங்கேற்க மதுரைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாக்களை முன்னிட்டு முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் 70 இடங்களிலும் குடிநீர், 80 இடங்களில் நடமாடும் கழிப்பறைகள், 15 இடங்களில் ஆம்புலன்ஸ்கள், 30 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் இந்த வசதிகளை எளிதாக பயன்படுத்த எந்தெந்த இடங்களில் இந்த வசதிகள் உள்ளன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள பிரத்யேக ‘க்யூஆர் கோடு’ வசதியை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் திருவிழா நடக்கும் 300 இடங்களுக்கும் மேல் இந்த ‘க்யூஆர் கோடு’கள் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றை பக்தர்கள் ஸ்கேன் செய்தால் அருகே உள்ள மருத்துவ முகாம், குடிநீர், கழிப்பறை வசதிகள் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.