ராமேசுவரம்: முஸ்லிம்களின் நீத்தார் நினைவு நாளான மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சமய நல்லிணகத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இந்துக்கள் தீ மிதித்து மொகரம் பண்டிகையை கடைப்பிடித்தனர்.
கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் உசைன் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளை மொகரமாக முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் கடைப்பிடிக்கின்றனர். முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடுவதாக அறியப்பட்ட இந்த பண்டிகையை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள இந்துக்களும் காலம் காலமாக கடைபிடிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தார் வாழ்ந்து வந்துள்ளார். இவர் இப்பகுதியில் நீர்நிலைகளை உருவாக்கி, விவசாய நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு பிறகு அவர் நினைவாக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை பூக்குழி திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

விழா கடந்த ஜூன் 27-ந் தேதி துவங்கியது. தொடர்ந்து 7ஆம் நாள் மற்றும் 11ஆம் நாளில், மேலக்கடலாடியில் உள்ள அவரது நினைவிட அத்தி மரத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. இதற்கு, இந்து கோயில்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடைசி நாளான சனிக்கிழமை இரவு சிறப்பு புகழ்மாலை ஓதப்பட்டு, முஸ்லீம்-இந்து சடங்குகள் செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆண்கள் பூக்குழி இறங்கினர். பெண்கள் தலையில் தீக்கங்குகளை கொட்டி வழிபாடு செய்தனர். இந்த பூக்குழி திருவிழாவில் கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி பகுதிகளைச் சேர்ந்த திரளான இந்து இஸ்லாமிய பக்தர்கள் கலந்து கொண்டனர்.