கள்ளழகரைப் போற்றும் வகையில் மதுரையில் எம்.ஆர். புரமோட்டர்ஸ் சார்பில் ‘மண்ணதிர… விண்ணதிர… வாராரு வாராரு… கள்ளழகர் வாராரு…’ எனும் பக்திப் பாடல் வெளியீட்டு விழா மதுரை காளவாசலில் உள்ள தங்கம் கிராண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. வரும் 10-ம் தேதி அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்குப் புறப்படுகிறார். 11-ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்.
இந்நிலையில், கள்ளழகரை வரவேற்க எம்.ஆர். புரமோட்டர்ஸ் சார்பில் ‘மண்ணதிர… விண்ணதிர… வாராரு… வாராரு… கள்ளழகர் வாராரு’ என்ற பக்தி மணம் கமழும் புதிய பாடல் தயாராகியுள்ளது. கள்ளழகர் புகழ் பாடும் இப்பாடலுக்கு இளையவன் இசை அமைத்துள்ளார். பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ளார்.
இப்பாடலின் ‘பர்ஸ்ட் லுக்’ மற்றும் சிடி-க்கள் வெளியீட்டு விழா நேற்று மதுரை காளவாசல் சந்திப்பில் உள்ள தங்கம் கிராண்ட் ஹோட்டலில் நடந்தது. பாடல் சிடி-க்களை எம்.ஆர். புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர்கள் ஏ.மணிகண்டன், ரம்யா மணிகண்டன், இயக்குநர் வள்ளி மணிகண்டன் வெளியிட, தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் (ஐஎன்டியுசி) குமார், புதுயுகம் டிவி எம்.எஸ்.பரணி, உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞர் ராகவேந்திரன், மாவட்ட நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் என்.சிவமுருகன், மதுரை தொழிலதிபர் விஆர்ஜி.பழனியப்பன், தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜெகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் இசை அமைப்பாளர் இளையவன், கவிஞர் கலைக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற குமார், சிவமுருகன் உள்ளிட்டோர் பேசும்போது, “கள்ளழகரின் பக்தர்கள் நிறைந்த மதுரை மக்களின் உணர்வுகளை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. மதுரை மண் இருக்கும் வரையில் இப்பாடல் இருக்கும். நமது மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலை பக்தி உணர்வோடு எம்.ஆர். புரமோட்டர்ஸ் உருவாக்கியதன் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளனர். இந்த சித்திரை திருவிழாவில் மண்ணதிர… விண்ணதிர… பாடல் மிகவும் பிரபலாகும். கள்ளழகரின் பக்தர்களை ஆட்டம் போட வைக்கும்” என்றனர்.
இவ்விழாவின் நியூஸ் பார்ட்னராக `இந்து தமிழ் திசை,’ மீடியா பார்ட்னரான புதுயுகம், ரேடியோ பார்ட்னரான ரேடியோ சிட்டி, மியூசிக் பார்ட்னரான சரிகம ஆகியவை இணைந்துள்ளன.