திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. 9 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவுக்காக ரூ.3.5 கோடி செலவில் 60 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவ விழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிஅனில்குமார் சிங்கால் தலைமையில் திருமலையில் நேற்று நடந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரம்மோற்சவ விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளன. ஆகம சாஸ்திர விதிகளின்படி கடந்த செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. வாகனங்களின் மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன. முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் 24-ம் தேதி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். அன்று மாலை கொடியேற்றத்துடன் ஏழுமலையானின் பிரம்மோற்சவம் தொடங்குகிறது.
மறுநாள் 25-ம் தேதி பக்தர்கள் தங்கும் பிஏசி-5 தொகுப்பு விடுதிகளை முதல்வர் திறந்து வைக்கிறார். சிவில் பொறியியல் பணிகளுக்காக ரூ.9.5 கோடியும், எலக்ட்ரிக் பணிகளுக்காக ரூ.5.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலர் அலங்காரத்துக்காக ரூ. 3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது.
நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்காக 3,500 தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திருமலையில் 36 எல்.இ.டி தொலைக்காட்சிகள் மூலம் வாகன சேவையை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருட சேவையன்று தவிர, நாள் ஒன்றுக்கு 1.16 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், மற்றும் 25 ஆயிரம் சர்வ தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டு, விஐபி பிரேக் தரிசன முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்களும், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தினமும் 8 லட்சம் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளன. 20 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கருட சேவையன்று மாட வீதிகளில் வாகன சேவையை காண திரண்டிருக்கும் பக்தர்களுக்கு 14 வகையான உணவுகளை விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்களுக்கு மாத்ரு ஸ்ரீ வெங்கமாம்பாள் அன்னதான சத்திரத்தில் இலவச அன்னதானம் வழங்கப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் வாகனங்கள் நிறுத்துமிட வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் 1,900 தடவை திருமலை-திருப்பதி இடையே ஆந்திர அரசு பேருந்துகள் இயக்கப்படும். கருட சேவையான 28-ம் தேதி 3,200 தடவைகள் பேருந்துகள் இயக்கப்படும்.
2,000 திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள், 4,700 போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் 3,500 ஸ்ரீவாரி சேவகர்கள், 450 சீனியர் அதிகாரிகளும் பாதுகாப்பு, சேவை உள்ளிட்ட பணியில் இருப்பர். 3,000 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கமாண்ட் கன்ட்ரோல் அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்
2,300 துப்புரவு தொழிலாளர்களுடன் கூடுதலாக 960 பேர் துப்புரவு பணி செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.