மூலவர்: ஏகபுஷ்ப பிரியநாதர் அம்பாள்: தாயுனும் நல்லாள் தல வரலாறு: பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் ‘தேவ அர்க்கவல்லி’ என்ற மலரைக் கொண்டு சிவனை பூஜித்தால், உலகிலுள்ள அனைத்து மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்பதை நாரதரும், தேவலோக ரிஷிகளும் அறிந்தனர். அதனால் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியைத் தேர்வு செய்து, அம்மலரைத் தேடச் செய்தனர். பிருகு மகரிஷியும் பூவுலகில் தவம் செய்து நிறைவாக திருத்தியமலை வந்தார். அந்த நேரத்தில் அங்கு அகத்தியரும், அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். பிருகு மகரிஷி, அகத்தியரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் ரகசியத்தைக் கேட்டறிந்தார். அப்போது மலையின் மீது இருந்த மரத்தருகே ஆயிரக்கணக்கான பறவைகள் காணப்பட்டன.
மகா சிவராத்திரி தினத்தில் பறவைகள் ‘ஓம் நமசிவாய’ என்று கூக்குரலிட்டபடி பறந்தன. பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டுகொண்டதால், பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார். அகத்தியர் முதல் முறையாக பிருகு முனிவரையும், லோபமாதாவையும் குன்றின் மீது அழைத்துச் சென்றார். அங்குள்ள சுனைநீரில் தேவ அர்க்கவல்லி பூவின் பிம்பத்தை மூவரும் கண்டனர். இதையடுத்து சிவபெருமான், தேவ அர்க்கவல்லி என்ற பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அவர்களுக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
கோயிலின் சிறப்பு: ஈசன், தேவ அர்க்கவல்லி என்ற ஒற்றை புஷ்பத்தைச் சூடிக்கொண்டதால் ஏகபுஷ்ப பிரியநாதர் (பாத தட்சிணாமூர்த்தி) என்று அழைக்கப்படுகிறார். இவர் பிரம்மஹத்தி தோஷத்தைக் களைந்து ஆனந்த வாழ்வு அளிப்பார். திருத்தியமலையை பௌர்ணமி நாளன்று வலம் வந்தால் 100 அரசமரம், 1,000 வில்வமரம், 10,000 வன்னி மரம், 1 லட்சம் வேப்பமரம் சுற்றியதன் பலன் கிடைக்கும்.
அமைவிடம்: திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், நெ.1. டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்ஞீலி, மூவானூர், வேங்கைமண்டலம் வழியாக திருத்தியமலைக்கு செல்லலாம்.கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9-12, மாலை 5-7 வரை.