திண்டுக்கல்: பழநி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயில் 1428-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் அகோபில வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார்.
வீர ஆஞ்சநேயர், கருடாழ்வார், திருமங்கையாழ்வார், விநாயகர், கிருஷ்ணர், மகாலட்சுமிக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன. கருடாழ்வார் சந்நிதிக்கு மேலே 12 ராசி கட்டங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த ராசிக் கட்டத்துக்கு நேரே நின்று பிரார்த்தனை செய்தால் நினைத்து பலிக்கும் என்பது ஐதீகம். வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாக பெருமாளின் 10 அவதாரங்களின் திருக்கோலத்தையும் இக்கோயிலில் காண முடியும். இக்கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா செவ்வாய் கிழமை (இன்று) தொடங்கி செப்.12-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
திருவிழாவின் முதல் நாளான இன்று (செப்.2)காலை பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பத்து நாள் திருவிழாவில் தினமும் பக்தி சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலா நடக்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக செப்.8-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாணம், செப்.9-ம் தேதி இரவு பாரி வேட்டை, செப்.10-ம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் தேரோட்டம், தொடர்ந்து தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. செப்.11-ம் தேதி கொடியிறக்குதல், செப்.12-ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.