திருப்பதி: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் விழாக்கோலம் பூண்டு வருகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம் வரும் 8-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக கோயில் முழுவதும் விதவிதமான மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அலங்கார தோரணங்கள், பேனர்கள், கட்-அவுட்கள் பொருத்தும் பணிகளும் மாட வீதிகளில் வண்ணக் கோலங்கள் போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசைகள், அன்னதானம், குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது. வரலட்சுமி விரத நாளில் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை வரலட்சுமி கலச பூஜைகள் நடைபெற உள்ளது.
அன்று திருப்பதி தேவஸ்தானத்தின் 51 கோயில்களிலும் பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல்கள், கங்கனம், லட்சுமி அஷ்டோத்திர புத்தகம், அட்சதை ஆகியவற்றை இலவசமாக வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.