மூலவர்: திரிவிக்கிரம நாராயணர் அம்பாள்: லோகநாயகி தல வரலாறு: பல யுகங்கள் வாழும்படி சாகா வரம் பெற்றிருந்தார் பிரம்மா. இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகி, தனது படைக்கும் தொழிலை அவர் சரிவர செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு. இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக இடதுகாலைத் தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு விருப்பம் எழுந்தது. சுவாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு மகாவிஷ்ணு, திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், “என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெறுவீர்.
மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்” என்று கூறினார். சூட்சுமமாக மகாவிஷ்ணு, தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப் பெற்றார். கோயில் சிறப்பு: பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியை தாங்கியபடி இருப்பதைப் போல, இங்கு லோகநாயகி தாயார், தன் மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி அருள்பாலிக்கிறாள். ஒரு கால் ஊன்றி மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டிருப்பதால் சுவாமியின் பாதம் வலித்து விடாமல் இருக்க அவரை இத்தலத்தில் மகாலட்சுமி தாங்குகிறாள். எனவே அவள் தன் மார்பில் சுவாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது. கிழக்கு நோக்கி 3 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இக்கோயில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. பணிகளில் சிறக்க, பதவி உயர்வு பெற, ஆயுள் விருத்தி பெற இங்கு வழிபடலாம்.
அமைவிடம்: சீர்காழி பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் 2 கிமீ தூரத்தில் உள்ளது. கோயில் திறக்கும் நேரம்: காலை 7.30-11.30, மாலை 5-8.30 மணி வரை.