உடுமலை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் பூஜைகள் நிறுத்தப்பட்டு, பக்தர்களை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாக அமைந்துள்ள திருமூர்த்தி மலை, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களில் ஒன்றாக உள்ளது. அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே குன்றில் எழுந்தருளியிருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் நாள் ஆடிபெருக்கு விழா, திருமூர்த்தி மலையில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான, ஆடிபெருக்கு ஆக.3ம் தேதியான இன்று அமணலிங்கேஸ்வரர் மற்றும் பிற தெய்வங்களுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். இந்த நாளில், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் நீராடி, இறைவனை வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வழக்கமான பூஜை நேரங்களுடன், நாள் முழுவதும் சிறப்பு தரிசனம், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள், உச்சிகால பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் கூடுதல் போலீசார், வனத்துறை, கோயில் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
நேற்றைய தினம் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனத்தில் பங்கேற்றனர். மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு சென்று ஆயிரக்கணக்கானோர் நீராடி மகிழ்ந்தனர். இதற்கிடையே பிற்பகலில் அருவியில் வெள்ள நீர் அதிகரித்தது. அதனால் அருவியில் குளிக்க சென்றவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றினர். வெள்ள நீர் அதிகரிக்கும் வாய்ப்பு இருந்ததால் அமணலிங்கேஸ்வரர் கோயிலில் பூஜைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. அங்கிருந்த பக்தர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் அமரநாதனிடம் கேட்டபோது, ”அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் முன் கூட்டியே கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு, தீயணைப்பு துறை, வனத்துறையினரின் ஒத்துழைப்பு கேட்கப்பட்டிருந்தது.
எதிர்பாராத விதமாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. உடனடியாக சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டனர். தற்காலிகமாக பூஜைகளும் நிறுத்தப்பட்டன” என்று அமரநாதன் கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.