திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு, 11-ம் நாளான நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. 12-ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் புறப்பாடாயினர்.
திருக்கல்யாணத்தையொட்டி, வெள்ளி சிம்ம வாகனத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி மூலக்கரையிலுள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது, மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரை சந்திப்பு மண்டபத்தில் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்ட சுவாமிகள், சந்திப்பு மண்டபத்திலிருந்து கோயில் வரையுள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினர். பின்னர் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயிலுக்குள் ஆறுகால் மண்டபத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில், மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர் பின்னர், மணக்கோலத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பிற்பகல் 1.25 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இரவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பல்லக்கிலும், சுப்பிரமணிய சுவாமி அம்பாரி வாகனத்திலும், தெய்வானை அம்மன் ஆனந்தராயர் புஷ்பப் பல்லக்கிலும் எழுந்தருளினர். பின்னர், 16 கால் மண்டபத்தில் தீபாராதனை முடிந்து மீனாட்சி – சுந்தரேசுவரரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, 13-ம் நாளான இன்று (மார்ச் 19) காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணியளவில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 14-ம் நாளான மார்ச் 20-ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருக்கல்யாணம் பிற்பகல் 12.15 மணிக்கு தொடங்கி 12.45 மணிக்குள்ளாக மிதுன லக்னத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருமண மேடைக்கு வர தகுந்த பாதுகாப்பு வசதிகள் செய்யாததால் தாமதமானது. இதனால் பிற்பகல் 1.25 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முகூர்த்த நேரத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தின்போது திருமணமான பெண்கள் புது மாங்கல்யம் அணிந்து கொள்வர். ஆனால், ஒரு மணி நேரம் தாமதமாக திருக்கல்யாணம் நடைபெற்றதால் பெண்கள் குழப்பமடைந்தனர். இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா கூறுகையில், ‘திருக்கல்யாணத்துக்கான முகூர்த்த நேரம் பிற்பகல் 1.35 மணி வரை இருப்பதாக சிவாச்சாரியார்கள் கூறினர். அதனால் அந்த நேரத்துக்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது’ என்றார்.