ராமேசுவரம்: பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை விஸ்வநாதர் சன்னதி எதிரே 1008 சங்குகள் அடுக்கி கங்கை தீர்த்தம் ஊற்றப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலின் மேலவாசல் முருகன் சன்னதியில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 63-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
மேலவாசல் முருகன் சன்னதியில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பால்குடம், மயில், பறக்கும் காவடிகளில் பக்தர்கள் தொங்கியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அது போல 2 அடி முதல் 20 அடி நீளம் வரையிலான நீண்ட வேல்களை வாயில் குத்தியபடியும் சாலைகளில் ஆடி வந்து மேலவாசல் முருகன் சன்னதியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு 8 மணி அளவில் மேலவாசல் முருகன் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனை பூஜை நடைபெற்ற உள்ளது.