ஆதிபராசக்தியின் 51 சக்தி பீடங்களில் கமல பீடமாக திருநெல்வேலி காந்திமதியம்மன் கோயில் விளங்குகிறது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமான நெல்லையப்பர் கோயிலும், அருகிலேயே காந்திமதியம்மன் கோயிலும் இரட்டைக் கோயில்களாக திருநெல்வேலியில் நடுநாயகமாக அமைந்திருக்கின்றன.
பஞ்ச சபைகளில் இது தாமிர சபை. நெல்லையப்பருக்கு அபிஷேகம் செய்யப்படும்போது லிங்கத்தில் அம்பிகையின் உருவம் தெரிவது ஓர் அற்புத காட்சியாகும்.
வடிவுடை நாயகி, நெல்லை நாயகி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் காந்திமதியம்மன், கமலபீட நாயகியாய் அருள்பாலிக்கிறார்.
தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு நடப்பது போலவே அன்னையின் திருமண விழா, அதையடுத்து வளைகாப்பு விழா ஆண்டுதோறும் இக்கோயிலில் பக்தர்களால் நடத்தப்படுகிறது.
ஆடிப்பூர வளைகாப்பு விழாவின் நான்காம் நாளில் வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. அத்துடன் புரட்டாசி நவராத்திரி திருவிழா, திருக்கல்யாண திருவிழா, ஆனி பெருந்திருவிழா போன்றவையும் சிறப்பாக நடத்தப்படு கின்றன.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் புதிய பட்டு உடுத்தி, சந்தனம், ஜவ்வாது பூசி, தலையலங்காரம் செய்து, மாலை அணிந்து, தங்க நகைகள் ஜொலிக்க அலங்கரிக்கப்பட்ட தேவியாக காந்திமதி அம்மன் அருள் பாலிப்பாள். அப்போது அனைத்து பழ வகைகளும், பிரசாதங்களும் நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன.
அறம்வளர்த்த நாயகியாக இங்கு அமர்ந்துள்ள தேவியை, ஈசன் திருமணம் செய்து கொண்டதால், இங்கு திருமணம், சஷ்டியப்த பூர்த்தி போன்றவை நடத்துவது மிகச்சிறந்தது. ஆடி மாத வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அளிக்கப்படும் வளையல்களை பெண்கள் அணிந்தால் பிள்ளைவரம் வேண்டுவோருக்கு பிள்ளை வரமும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் கைகூடும் என்பது ஐதீகம்.