திருநெல்வேலி: நெல்லையில் நேற்று நெல்லையப்பர் கோயில் 519-வது ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நெல்லையப்பர் கோயிலில் கடந்த 30-ம் தேதி ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 8-ம் நாளான நேற்றுமுன் தினம் காலை நடராஜப் பெருமாள் திருவீதி உலா, மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலா, இரவு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதிஉலா நடைபெற்றது.
விழாவின் 9-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து,சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆட்சியர் ஆர்.சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா, காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இதையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், 3 ட்ரோன் கேமராக்கள் மற்றும் 300 கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.நெல்லை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.