தேனி: நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. பூஜைக்கான நெற்கதிர்கள் இன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பம்பைக்கு வர உள்ளது.
மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்க மாதம் (ஆவணி) ஆகும். இந்த மாதத்தில்தான் கேரளாவின் பெரிய பண்டிகையான ஓணம் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக சபரிமலை உள்ளிட்ட பல கோயில்களில் சுவாமிக்கு நெற்கதிர்களை படைத்து வழிபாடு நடைபெறுவது வழக்கம். இது நிறைபுத்தரி (நிறையும் புது அரிசி) என அழைக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (புதன்) அதிகாலை 5.30 மணிக்கு இந்த வழிபாடு தொடங்க உள்ளதால் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இதற்காக புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள், அச்சன்கோயில் தர்மசாஸ்தா கோயிலில் இருந்து கொண்டு வரப்படுகிறது. சிறப்பு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு திருஆபரணப்பெட்டியில் இந்த நெற்கதிர்கள் இன்று மாலையில் பம்பைக்கு வர உள்ளது. தொடர்ந்து அங்குள்ள கணபதி கோயிலில் பூஜை செய்யப்பட்டு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.
பின்பு நாளை அதிகாலை நெற்கதிர்கள் ஐயப்பனுக்கு படையலிட்டு பின்பு பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படும். இதேபோல் இந்த நிறைபுத்தரி பூஜை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு தர்மசாஸ்தா உள்ளிட்ட கேரளாவின் பிரசித்தி பெற்ற தலங்களிலும் நடைபெற உள்ளது என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.