மூலவர்: பாலமுருகன் உற்சவர்: சுப்பிரமணியர் தலவரலாறு: பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் ராயக்கோட்டையிலிருந்து ஓசூருக்கு உபன்யாசம் செய்ய முருக பக்தர் சென்று கொண்டிருந்தார். வழியில் அகரம் கிராமத்தில் அவரை சர்ப்பம் வழிமறித்தது. தனக்கு வழிவிடுமாறு பக்தர் கேட்டதும், நாகம் நகரத் தொடங்கியது. அது தம்மை எங்கோ அழைத்துச் செல்ல முற்படுகிறது என்பதை உணர்ந்து. நாகத்தைப் பின்தொடர்ந்தார். அது புதர் மண்டிக்கிடந்த இடத்தில் புற்று அருகில் சென்றதும் திடீரென மறைந்து போனது. பின்னர் அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அங்கு மண்டபம், திருக்குளத்துடன் கோயில் இருந்ததற்கான அடையாளம் தென்பட்டது.
இப்பகுதியில் அன்னியர் படையெடுப்பின்போது பல கோயில்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் இந்த கோயிலும் ஒன்று என்பதும் பின்னர் தெரியவந்தது. ஆறுமுகனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பக்தர், அந்த இடத்தை சீர்படுத்தி, பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜைகளையும் மேற்கொண்டார். தற்போது பழைய கோயிலுக்கு அருகில் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.
கோயில் சிறப்பு: மயில் வாகனத்துக்கு முன்பு கருவறையில் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் பாலமுருகன் அருள்பாலிக்கிறார். ஒருசமயம் லாரியில் தேங்காய் லோடு ஏற்றும்போது, லாரி ஓட்டுநர் தேங்காய் வியாபாரியிடம் பாலமுருகனுக்கு உடைக்க ஒரு தேங்காய் கேட்டுள்ளார். அவர் தேங்காய் தர மறுத்து, ‘பாலமுருகனுக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா?’ என்று கிண்டலாக கேட்டுள்ளார். அப்போது வியாபாரி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த தேங்காய் ஒன்றில் இரண்டு கொம்புகள் காணப்பட்டன. அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த வியாபாரி, பாலமுருகனிடம் மன்னிப்பு கோரினார். மேலும் கொம்பு முளைத்த தேங்காயை கோயிலில் வைத்து பாதுகாக்கும்படி கூறினார். நினைத்த காரியம் கைகூட இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அமைவிடம்: ஒசூரிலிருந்து (16 கிமீ) உத்தனபள்ளி வழியாக ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8-12, மாலை 5-7.30 மணி வரை.