நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, குமரி மாவட்டத்திலிருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பாடை முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில், மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருவனந்தபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்ரகங்கள், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நேற்று முன்தினம் காலையில் சுசீந்திரத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடாகி, மாலையில் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயிலை அடைந்தார். நேற்று அதிகாலையில் வேளிமலை குமாரசுவாமி விக்ரகம், பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோயிலை வந்தடைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள், சுவாமி ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்படும்.
பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் நேற்று காலை 7.30 மணியளவில் நடைபெற்ற விழாவில், மன்னரின் உடைவாளை கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன், குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணியிடம் ஒப்படைத்தார். அதை, அவர் பத்மநாபபுரம் அரண்மனை ஊழியர் மோகனகுமாரிடம் வழங்கினார். அப்போது, தமிழக, கேரள போலீஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், விஜய்வசந்த் எம்.பி., அமைச்சர் மனோதங்கராஜ், குமரி ஆட்சியர் அழகுமீனா, எஸ்.பி. ஸ்டாலின், கேரள எம்எல்ஏக்கள் ஹரீந்திரன், வின்சென்ட், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா கலந்துகொண்டனர்.
உடைவாள் கைமாறியதும் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. யானை மீது சரஸ்வதி தேவி விக்ரகம், பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை முருகன் விக்ரகங்கள் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் நவராத்திரி விழா ஊர்வலம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டது. சுவாமி விக்கிரகங்கள் இன்று (21-ம் தேதி) களியக்காவிளை எல்லையை சென்றடைகின்றன. அங்கு, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலையில் கேரள போலீஸார் மற்றும் அதிகாரிகளிடம் விக்ரகங்கள் ஒப்படைக்கப்படும்.