மூலவர்: வாசுதேவ பெருமாள் அம்பாள்: செங்கமல வல்லி தல வரலாறு: இலங்கையில் யுத்தம் முடிந்து ராமபிரான், அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது நாரதர் ராமபிரானிடம், “இலங்கையில் யுத்தம் முடிந்தாலும், அரக்கர்களின் வாரிசுகள் இன்னும் உயிருடன் உள்ளனர். ராவணனின் அழிவால், கோபத்துடன் இருக்கும் அவர்கள் உன்னை அழிப்பதாக சபதம் செய்துள்ளனர். கடலுக்கடியில் அசுரர்களான இரக்கபிந்து, இரக்தராட்சகன் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் பூர்த்தியானால், இறந்துபோன அனைத்து அசுரர்களும் உயிர் பெற்றுவிடுவர். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்” என்றார்.
உடனே ராமன், “குறிப்பிட்ட காலத்துக்குள் நான் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். இதையடுத்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு அனுமனை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அனுமனுக்கு திருமால் சங்கு, சக்கரத்தையும், பிரம்மா பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ராமன் வில், அம்பையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், கருடன் தன் இறக்கைகளையும் கொடுத்தனர். கிருஷ்ணனின் வெண்ணை இடது கையில் உள்ளது. சிவபெருமான் தன்நெற்றிக்கண்ணை அளித்தார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் பத்து கரங்களில் பத்து ஆயுதங்களுடன், திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயராக, அனுமன் காட்சியளித்தார்.
அசுரர்களை அழித்துவிட்டு அயோத்தி திரும்பும் வழியில் ஆனந்தமயமாக இங்கு அனுமன் தங்கியதால் இவ்வூர் ஆனந்த மங்கலம் (அனந்தமங்கலம்) என்று அழைக்கப்படுகிறது. கோயில் சிறப்பு : ஆஞ்சநேயரின் வாலில் நவகிரகங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. தோஷம் உள்ளவர்கள் அவை நீங்க ராஜகோபால சுவாமி, அனுமனை பிரார்த்திக்கின்றனர். அமைவிடம் : மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 8-1, மாலை 4-8 வரை.