மூலவர்: கிளிவண்ணமுடையார் அம்பாள்: சுவர்ணாம்பிகை தல வரலாறு: பிரம்ம தேவன் தன் படைப்பில் ஒவ் வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்கிறது என்ற ரகசியத்தை சொல்ல அதைகேட்டுக் கொண்டிருந்தவர்களில், சிவநெறிகளில் சிறந்தசுகர் என்ற முனிவர் சரஸ்வதியிடம் சென்று கூறினார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன் சுக முனிவரை கிளியாக மாறும்படி சபித்தார். மேலும் பாபநாசம் பகுதியில் (இப்போதைய கோயில் பகுதி) அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தால் சாபம் நீங்கும் என்று கூறினார். அதேபோல் எண்ணற்ற கிளிகளோடு தானும் ஒரு கிளியாக வடிவம்கொண்ட சுக முனிவர் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.
அப்போது வேடன் ஒருவன் கிளிகளை விரட்டியடிக்க, அவை புற்றில் பதுங்கின. கோபம் கொண்ட வேடன் புற்றை வெட்டினான். கிளிகள் அனைத்தும் இறந்தன. அப்போது ராசகிளி (சுகர்) மட்டும் சுயம்புமூர்த்தியின் முடி மீது சிறகை விரித்து காத்தது. வேடன் கிளியை வெட்டினான். கிளி இறக்க சுயம்புவின் தலையில் ரத்தம் பீறிட்டது. இறைவனை உணர்ந்த வேடன், வாளால் வெட்டி தன்னை மாய்த்துக் கொண்டான். சிவனடி சேர்ந்ததால் கிளி உருவம் மறையப் பெற்ற சுக முனிவர், “பெருமானே உன் திருப்பெயர் சுகவனேஸ்வரராக இருந்து இத்திருத்தலத்தில் அருள் தர வேண்டும்” என்று கேட்டுக் கொள்ள, அதன்படி இறைவனும் அருளியதாக வரலாறு கூறுகிறது.
கோயில் சிறப்பு: சுக முனிவரின் மூலவர், உற்சவ மூர்த்தி உள்ளது. நவகிரகங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். நவகிரக சக்தி மேல் தளத்தில் பல்லி, உடும்பு உருவங்கள் உள்ளன. பல்லி விழும் உபாதைகளுக்கு நிவர்த்தி பெற்று சுகம் பெறலாம். விகடச் சக்கர விநாயகரை வணங்குவதால் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பாலாரிஷ்ட உபாதைகள் நீங்கும். அமைவிடம்: சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் திருமணிமுத்தாற்றின் கரையோரம் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6-12, மாலை 4-9 மணி வரை.