அத்ரி முனிவரின் மனைவி அனுசுயாவை மும்மூர்த்திகளும் ஒரு சோதனைக்கு உட்படுத்தினர். ஒருசமயம் அனுசுயா, கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார். அப்போது மும்மூர்த்திகளும் முனிவர்களைப் போன்று வேடம் தரித்து, அத்ரி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து யாசகம் கேட்டனர். தனது கற்பின் வலிமையால் அவர்கள் யார் என்பதை உணர்ந்த அனுசுயா, அவர்களை குழந்தைகளாக்கி, அவர்களுக்கு உணவு அளித்தாள்.
மும்மூர்த்திகளைக் காணாது, முப்பெரும் தேவியரும் தவித்தனர். எங்கு சென்று அவர்களைத் தேடுவது என்று மூவரும் எண்ணியபோது, நாரதர் அவர்களுக்கு மும்மூர்த்திகள் இருக்கும் இடத்தை உணர்த்தினார். உடனே அனுசுயாவின் குடிலுக்கு வந்த முப்பெரும்தேவியர், மும்மூர்த்திகளும் குழந்தைகளாக இருப்பதை பார்த்து கோபம் கொண்டனர். அனுசுயாவின் கற்பின் சிறப்பை உலகுக்கு உணர்த்த விரும்பிய நாரதர், இரும்பால் செய்யப்பட்ட சுண்டல் கடலையை அனுசுயா, முப்பெரும்தேவியரிடம் கொடுத்து அவற்றை அவித்து வரும்படி கூறினார்.
இரும்பு சுண்டல் கடலை எப்படி வேகும்? முப்பெரும்தேவியரால் அவற்றை வேக வைக்க முடியவில்லை. ஆனால், அனுசுயா அவற்றை வேக வைத்து கொண்டு வந்தாள். அனுசுயா சுண்டல் படைத்த நாள் சரஸ்வதி பூஜை தினமாகும். அதனால்தான் அன்று சுண்டல் படைக்கிறோம். பிறகு நவராத்திரியின் 9 நாட்களும் சுண்டல் படைப்பது வழக்கம் ஆயிற்று.
நரசிம்மதாரிணியை வழிபடுவதால் நமக்கு இஷ்ட சித்தி கிடைக்கும். ராகு தோஷம் நிவர்த்தியாகும். எதிர்பாராத செல்வம், புகழ் கிட்டும். 9வயது சிறுமியை மகா கவுரி வேடத்தில் நவக்கிரக நாயகியாக நினைத்து பூஜிக்க வேண்டும். முன்னதாக தாமரை மலர் போல் கோலமிட வேண்டும். புன்னாகவராளி, சங்கராபரணம் ராகங்களில் பாடல்கள் பாடி மருதோன்றி, சம்பங்கி, வெண் தாமரை, இருவாட்சி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் ஆகியவற்றில் முடிந்ததை நைவேத்தியம் செய்ய வேண்டும்.