திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
திருவள்ளூரில் அமைந்துள்ளது சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வீரராகவபெருமாள் கோயில். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயில் அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த வீரராகவபெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து காலை 6.30 மணியளவில், தங்க சப்பரத்தில் வீரராகவபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக விதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவில், நாள் தோறும் காலை, இரவு வேளைகளில் ஹம்ச வாகனம், ஷேச வாகனம், யாளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீரராகவபெருமாள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.