சென்னை: திருவல்லிக்கேணி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் பார்த்த சாரதி பெருமாளுக்கு சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவங்கள் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
அதிகாலை 5 மணிக்கு நரசிம்மர் தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர் 9 மணி அளவில் கோயில் நிலையை வந்தடைந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தோட்ட திரு மஞ்சனம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான, நாளை காலை பல்லக்கில் லட்சுமி நரசிம்மர் திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். மேலும், நாளை மாலையில் குதிரை வாகன வீதி உலா நடைபெறுகிறது.
ஜூலை 12-ம் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு, தீர்த்த வாரி உற்சவம் நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. மேலும், வெட்டி வேர் புறப்பாடு ஜூலை 13-ம் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது. 14-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.