மூலவர்: பயற்ணீசுவரர் அம்பாள்: நறுமலர்பூங்குழல் நாயகி தல வரலாறு: சோழ நாட்டில் சுங்கச்சாவடி வழியாக ஒரு வணிகன் மாடுகளின் மேல் மிளகு ஏற்றிக் கொண்டு வந்தான். அதை பார்த்த அதிகாரிகள் வரி கேட்டனர். மிளகு மூட்டை என்று சொன்னால் வரி அதிகமாக விதிப்பார்கள் என்று நினைத்து, வணிகன் அதிகாரிகளை நம்ப வைப்பதற்கு, ‘இந்த ஊர் இறைவன் சாட்சியாக இது பயிர் மூட்டைகள்’ என்று கூறி, அதற்கு உண்டான வரியை செலுத்தினான்.
பிறகு வெகு தூரம் சென்று மூட்டைகளை அவிழ்க்கும்போது எல்லாம் பயிராக இருந்தது. தான் சொன்ன பொய்யால்தான் இந்த தண்டனை என்று நினைத்து பழமலைநாத சுவாமியிடம் முறையிட்டான். அப்போது ஓர் அசரீரி குரல்,அவனை மன்னித்துவிட்டதாகவும், இனி பயிர் அனைத்தும் மிளகாக மாறும் எனவும் கூறியது. மிளகைப் பயிறாக மாற்றியதால் சிவபெருமான் பயிறணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஊர் பத்ராரண்யம், பயறணீச்சுரம், முற்கபுரி என்று அழைக்கப்படுகிறது.
கோயில் சிறப்பு: பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது நீரின்றி சிரமப்பட்டனர். விநாயகப் பெருமான் அர்ஜுனனுடைய காண்டீப வில்லை வளைத்து இந்த இடத்தில் ஏரியைஉருவாக்கினார். அகத்திய முனிவர் இங்கு தவம் மேற்கொள்ளும்போது தவளைகள் சப்தமிட்டன. கோபம் கொண்ட அகத்தியர் இனி இந்த ஏரியில் தவளை சப்தமிடக்கூடாது என்று சாபமிட்டார். அன்றுமுதல் ஏரியில் தவளைகள் சப்தம் செய்வதில்லை. இக்குளத்தில் நீர் வற்றுவதே இல்லை.
பிரார்த்தனை: பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வதால் திருமண தடை நீங்கும். பௌர்ணமி தினத்தில் கோயில், திருக்குளத்தை வலம் வந்தால் கைலாயம், கங்கையை சேர்த்து வலம் வந்த பலன் கிடைக்கும். ராகு தோஷம் நீக்கும் நவக்கிரக பரிகார தலமாக இத்தலம் விளங்குகிறது.
அமைவிடம்: அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அரியலூரில் இருந்து 28 கிமீ தொலைவிலும், ஜெயங்கொண்டத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8-10, மாலை 5-8 வரை.