சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகையாற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலையின் கால்களுக்கு இடையே காளியம்மன் வீற்றிருக்கிறாள். அம்மனின் இருபுறமும் பூத கணங்கள் உள்ளன. இங்கு விநாயகர், அடைக்கலம் காத்த அய்யனார் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. பிரம்ம குண்டம், மணி கர்ணி தீர்த்தங்கள் உள்ளன.
பண்டைய காலத்தில் மதுரையை வெள்ளம் சூழ்ந்ததால், எல்லை அமைத்துத் தருமாறு சிவபெருமானிடம் மீனாட்சியம்மன் தெரிவித்தார். எல்லையைக் குறிக்கும் விதமாக மதுரையை சுற்றிலும் சிவபெருமான் பாம்பு வடிவில் வளைந்து நின்றார். பாம்பு தலையும், வாலும் சந்தித்த இடம் ‘படப்புரம்’ என்றாகி காலப்போக்கில் மருவி ‘மடப்புரம்’ ஆனது.
பார்வதி தேவியும் சிவபெருமானும் வேட்டைக்கு வந்த சமயத்தில் பார்வதி தேவியின் பாதுகாப்புக்காக அய்யனார் அமர்த்தப்பட்டார். தான் அமர்ந்த இடத்துக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று பார்வதிதேவி கேட்டுக் கொண்டதால், ‘வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு, காசியில் நீராடிய பலன் கிட்டும்’ என்று சிவபெருமான் வரம் அளித்தார். அதன்பிறகு பார்வதி அங்கேயே காளி அவதாரம் எடுத்து தங்கினார்.
அவருக்கு பாதுகாப்பாக இருந்த, அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக வீற்றிருக்கிறார். மேலும் காசிக்கு நிகரான புண்ணியம் கிடைக்குமென சிவபெருமான் கூறியதால், இப்பகுதியில் உள்ள வைகையாற்றில் முன்னோருக்கு திதி கொடுத்து பக்தர்கள் நீராடி வருகின்றனர். தங்களுக்கு அநீதி செய்தவர்களை இந்த அம்மன் தட்டி கேட்பார் என்பது நம்பிக்கை உள்ளது.