மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி இன்று இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு ஜூலை 14-ம் தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 200 சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
அதனையொட்டி, நேற்று மாலையில் முதல் கால யாக பூஜை தொடங்கியது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று காலையில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெறறது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வேத சிவாகமத்துடன் 64 ஓதுவார்கள் மூலம் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் செய்தனர்.
மூன்றாம் நாளில் (ஜூலை 12) 4, 5-ம் கால யாக பூஜைகளும், நான்காம் நாள் (ஜூலை 13) 6, 7 கால யாக பூஜைகளும் நடைபெறும். அன்றிரவு மதுரையிலிருந்து வரும் மீனாட்சி, சுந்தரேசுவரரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஐந்தாம் நாள் (ஜூலை 14) கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு யாத்ராதானம் உடன் கலசங்கள் புறப்பாடு நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து காலை 5.30 மணிக்கு பரிவார மூர்த்திகள், சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 6 மணிக்கு தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6.30 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். பின்பு மீனாட்சி சுந்தரேசுவரரை வழியனுப்பும் விழா நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்ய பிரியா, துணை ஆணையர் எம்.சூரிய நாராயணன் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.