மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 7-ம் தேதி முதல் நாள் திருவிழா நடந்தது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. அதனையொட்டி 11-ம் நாள் (மார்ச் 17) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் 12-ம் நாள் (மார்ச் 18) திருக்கல்யாணம் நடைபெற்றது.
13-ம் நாளான (மார்ச் 19) இன்று தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணியளவில் கோயிலிலிருந்து புறப்பாடாகி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் தீபாராதனைக்குப்பின் காலை 6.15 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
இதில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன், அறங்காவலர்கள் பங்கேற்றனர். கிரிவலப்பாதையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பெரிய தேருக்கு முன்னதாக சிறிய சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளினார். சுமார் 3 கிமீ சுற்றளவுடைய கிரிவலப்பாதையில் தேரோட்டம் மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்து பக்தர்களை பரவசப்படுத்தியது. காலை 6.15 மணிக்கு நிலையிலிருந்து புறப்பட்ட தேர் காலை 10.50 மணிக்கு நிலையை அடைந்தது.
வெயில் சுட்டெரித்ததால் ஆங்காங்கே நீர்மோர் பந்தல் அமைத்து வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. ஆங்காங்கே அன்னதானமும் நடந்தது. இன்று இரவில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி அம்மனுடன் எழுந்தருள்வார். அதனைத் தொடர்ந்து 14-ம் நாளான நாளை (மார்ச் 20) தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.