திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பல்லக்கிலும் மாட வீதிகளில் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, திருப்பதி மற்றும் திருமலை எங்கும் வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் குறிப்பாக தமிழக மக்கள் திருமலைக்கு திரண்டு வந்து பிரம்மோற்சவத்தை கண்டுகளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 3-ம் நாள் விழாவில் உற்சவர் மலையப்பர், யோக நரசிம்மராக சிம்ம வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை வாகன சேவை நடைபெற்றது. 4 மாட வீதிகளில் பக்தர்கள் திரண்டிருந்து சுவாமியை தரிசித்தனர். வாகன சேவையின் முன் பல்வேறு மாநில கலைஞர்களின் நடனங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
முத்துப் பல்லக்கில் பவனி: திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திரனுக்குரிய பரிகார திருத்தலம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று இரவு, நவரத்தினங்களில் சந்திரனுக்குரிய முத்துக்களால் ஆன பல்லக்கில் தேவி, பூதேவி சமேதமாக மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார். வாகன சேவையில் தேவஸ்தான ஜீயர்கள், உயரதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.