திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர் மலையப்பரிடம் கணக்கு வழக்குகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்படைக்கிறது.
‘பரிமளம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஆழ்வார் திருமஞ்சன சேவை, ஒவ்வொரு ஆண்டும் உகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 4 முக்கிய நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும்.
இதையொட்டி நேற்று, பன்னீரில் குங்குமம், மஞ்சள், சந்தனம், பச்சை கற்பூரம் போன்றவை கலந்த வாசனை திரவியத்தால் கர்ப்பகிரகம், பலிபீடம், கொடிக்கம்பம், தங்க விமான கோபுரம், உப சன்னதிகள் என கோயிலின் அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டன. அதன் பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.