திருமலை: கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 5-ம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து விஐபி பக்தர்கள் பலர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவர்கள் தவிர ஆந்திரா, தெலங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் வழங்கும் சிபாரிசு கடிதங்கள் மூலமும் விஐபி பிரேக் தரிசனத்தில் பலர் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோடை விடுமுறை வருவதால் விஐபி பிரேக் தரிசனத்திற்கு வருவோரை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி ஏப்ரல் 5-ம் தேதி முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உள்ளூர் விஐபிகளின் சிபாரிசு கடிதங்கள் பெறுவதை தேவஸ்தான அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை ஜூன் 30-ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது.