தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் முழங்கி கும்பாபி ஷேகத்தைக் கண்டுகளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.100 கோடிக்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் நிறைவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. ஜூலை 1-ம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கரியமாணிக்க விநாயகர், பார்வதி அம்மன், மூலவர் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை அம்மனுக்கு கோயிலின் உட்புறம், தந்திரி சுப்பிரமணியரு தலைமையில் யாக பூஜைகள் நடைபெற்றன.
யாகசாலை பூஜை: சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரமாண்ட யாகசாலையில், 71 ஹோம குண்டங்கள் அமைத்து, 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு, பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், செல்வம் சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் ராஜா சிவாச்சாரியார் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் ஹோமங்கள் நடத்தினர்.
மேலும், கடந்த 5-ம் தேதி தொடங்கி, திருக்கல்யாண மண்டபத்தில் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து பட்டாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள் நடத்தினர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு கும்பங்கள், கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அங்கு விசேஷ பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து காலை 6.22 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகோபுரம் கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்தி கலசங்களுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்களும் புனித நீரால் அபிஷேகம் செய்தனர்.
அப்போது, ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷங்கள் விண்ணைப்பிளந்தன. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாரதி தீர்த்த மகா சன்னிதானம், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரி யார் சுவாமிகள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோயில் கடற்கரை, ராஜகோபுரத்தின் முன்புறம் ஆகிய இடங்களில் பக்தர்கள் திரண்டிருந்து கும்பாபிஷேக விழாவை தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக நகர் முழுவதும் முக்கியப் பகுதிகளில் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றன. அதேபோல், மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் சுமார் 6,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
சண்முகர் சந்நிதி விமான கலசத்துக்கு
புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்த சிவாச்சாரியார்கள்.
மருந்து சாத்துதல்: கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, கோயிலில் மூலவருக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமியை எழுந்தருளல் செய்தல், நான்கு வேதம் ஓதுதல், மாலையில் தான்ய வழிபாடு ஆகியவை நடந்தன. இதையொட்டி நேற்று முன்தினம் பகல் 12 மணி முதல் கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட் டிருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம் போல் கோயிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ் வேதங்கள் முற்றோதுதல்: யாகசாலை பூஜையின்போது வேதபாராயணம், 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு திருமுறை விண்ணப்பம் செய்யப்பட்டது. யாகசாலையில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 12 பெண் ஓதுவார்கள் உட்பட 108 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் செய்யப்பட்டன. கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.