மதுரை: “திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 18) ஆய்வு செய்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியது: “முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் 14 ஆண்டுக்குப் பின்னர் ஜூலை 14-ம் தேதி காலை 6 மணியிலிருந்து 7.15 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. அதற்கான திருப்பணிகளை ஆய்வு செய்தோம். இரண்டரை கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. திமுக ஆட்சி ஏற்பட்டபிறகுதான் 3117 கேயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெருந்திட்ட வரைவும் ஏற்படுத்தப்பட்டது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.400 கோடி செலவில் குடமுழுக்கு நடைபெறுவதால் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அறுபடை வீடுகள் தவிர்த்து 141 முருகன் கோயில்களில் 884 பணிகள் ரூ.1,085 கோடியில் நடந்து வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் பெருமை சேர்த்ததுபோல் எந்த ஆட்சியிலிரும் பெருமை சேர்க்கவில்லை. திருப்பரங்குன்றம் ரோப்கார் முதற்கட்ட ஆய்வு அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதற்கான டெண்டர் கோரப்படும் நிலையில் உள்ளது.
திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம். இன்னார் சொல்லித்தான் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதில்லை. நடைபெறப்போகும் ஒன்றை தாங்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகை என சொன்னபிறகு நடத்தப்படுவதாக கூறிக் கொள்கின்றனர். தானாக கனியும் கனியையும் தங்களது மந்திர சொற்களால் கனிந்ததாக சொல்லிக் கொள்கின்றனர்.
பழனி அனைத்துலக முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எந்த அரசியல் கட்சியையும் அழைக்கவிலை. எங்கும் அரசியல் வாடை இல்லை. ஆனால் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் ஆதாயத்துக்காகவும், அரசியல் லாப நோக்கத்தோடும் நடைபெறுகிறது. மதத்தால் மொழியால் இனத்தால் பிளவுபடுத்த தமிழக முதல்வர் அனுமதிக்கமாட்டார். அதன் முடிவு 2026 சட்டமன்றத் தேர்தலில் தெரியும்,” என்று அவர் கூறினார்.