தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினம், வைகாசி விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு நடந்த சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றது. பின்னர், தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவுபெற்றது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்தனர். கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் சிலர் அங்கபிரதட்சணம் செய்தும் சுவாமியை வழிபட்டனர்.
மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டிருந்தன. திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு நகர பகுதியில் பல்வேறு அமைப்பினர் அன்னதானம் வழங்கினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.