தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (7-ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று, கும்பாபிஷேக விழா ஜூன் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி மாலையாகசாலை பூஜைகள் தொடங்கின. கரியமாணிக்க விநாயகர், பார்வதி அம்மன், மூலவர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் உள்புறம் தந்திரி சுப்பிரமணியரு தலைமையிலும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோம குண்டங்கள் அமைத்து, 700 கும்பங்கள் வைக்கப்பட்டு. 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையிலும் பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று (ஜூலை 7) அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ராஜகோபுர கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்தி கலசங்களுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்களும் புனித நீரால் அபிஷேகம் செய்கின்றனர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தை காண கடற்கரை வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். எனவே, கும்பாபிஷேகத்தை தங்குதடையின்றி பக்தர்கள் காண்பதற்கு வசதியாக நகரம் முழுவதும் முக்கிய பகுதிகளில் 70 பெரிய எல்இடிதிரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவை காண தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்துகள் மற்றும் கார், வேன்களில் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.