திருச்சி: திருவானைக்காவலில் பங்குனி தேரோட்டம் இன்று (மார்ச் 30) காலை 7.20 மணிக்கு தொடங்கியது. தேர் திருவிழாவையொட்டி திருவானைக்காவல் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படக்கூடியது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும், பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் பெருவிழா பிரசித்திப் பெற்றது. அதன்படி நிகழாண்டு பங்குனி பெருவிழா கடந்த மார்ச் 8-ம் தேதி பெரிய கொடியேற்றுத்துடன் துவங்கியது. பங்குனித் தேரோட்டத்தை முன்னிட்டு 18-ம் தேதி ஸ்வாமி தேருக்கும், அம்மன் தேருக்கும் முகூர்த்தக்கால்கள் நடும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று மாலை வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய ஸ்வாமியும், அம்மனும், ‘தெருவடைச்சான்’ என்ற சப்பரத்தில் எழுந்தருளி, 4-ம் பிரகாரத்தை வலம் வந்தனர். கைலாய வாத்தியம், வேத மந்திரங்கள் ஒலிக்க திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் இன்று காலை 7.20 மணிக்கு தொடங்கியது. முதலில் விநாயகர், முருகள் தேர்கள் செல்ல, சோமாஸ்கந்தராக சிவன் திருத்தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அம்மன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேர் திருவிழாவையொட்டி திருவானைக்காவல் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.